செய்திகள்

பறக்கை அருகே கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி

Published On 2019-06-24 09:50 GMT   |   Update On 2019-06-24 09:50 GMT
நாகர்கோவில் பறக்கை அருகே கடன்தொல்லையால் கணவன், மனைவி விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஜி.ஓ. காலனி:

நாகர்கோவில் பறக்கை அருகே உள்ள சுவிசே‌ஷ புரத்தை சேர்ந்தவர் சிம்சோன் (வயது 45). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஏசுரோஸ்லெட் (40). இவர்களுக்கு அஜித் (19), அஸ்வின் (17) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களும் கட்டிடத் தொழிலுக்கு சென்று வருகிறார்கள்.

சிம்சோன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் எப்போதும் வேதனையுடன் இருந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

நேற்று இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் சிம் சோனும், அவரது மனைவி ஏசுரோஸ்லெட்டும் படுத்திருந்தனர். மற்றொரு அறையில் 2 மகன்கள் தூங்கினர்.

நள்ளிரவில் சிம்சோன் அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த சிம்சோனின் மகன்கள் 2 பேரும் விழித்தெழுந்து பார்த்தனர். அப்போது சிம்சோனும், அவரது மனைவி ஏசுரோஸ்லெட்டும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். கடன் தொல்லையால் அவதிப்பட்ட சிம் சோன், தனது மனைவியுடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இரவில் மகன்கள் தூங்கியதும் சிம்சோனும், ஏசுரோஸ்லெட்டும் வாழைப்பழத்தில் வி‌ஷம் கலந்து தின்றுள்ளனர். இதில் அவர்கள் உயிருக்கு போராடியது தெரியவந்தது.

தாய்-தந்தையின் நிலையை கண்டு மகன்கள் 2 பேரும் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் வி‌ஷம் குடித்த சிம்சோனையும், அவரது மனைவியையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கு முயன்ற சிம்சோன் வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். கடிதத்தில் சிம் சோன் எழுதியிருந்ததாவது:-

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பழவூரில் வாடகை வீட்டில் வசித்தோம். அங்கு 2 பேரிடம் கடன் வாங்கியிருந்தேன். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் பணம் கொடுத்தவர்கள் எனக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். மேலும் பறக்கையில் ஒருவரிடம் சீட்டுப் போட்டிருந்தேன். அந்த சீட்டுப்பணத்தை எடுத்து விட்டேன். அதன் பிறகு என்னால் பணத்தை கட்ட முடியவில்லை. இதனால் அங்கும் எனக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த வேதனையில் நானும், எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வி‌ஷம் தின்றோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளது.

சிம்சோன் பழவூர் பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு ரூ.3½ லட்சம் வரை கடன் பாக்கி கொடுக்க வேண்டியிருந்ததாகவும், அதனால் அவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News