செய்திகள்
சாத்தனூர் அணை

60 ஆண்டாக தூர்வாரப்படாத சாத்தனூர் அணை

Published On 2019-06-24 06:44 GMT   |   Update On 2019-06-24 08:23 GMT
சாத்தனூர் அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளை கடந்தும் இதுவரை இந்த அணை ஒருமுறைகூட தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக அணையில் 30 அடிக்கு மேல் மண்ணும், சேறுமே நிரம்பி உள்ளது.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது அணையில் 68.95 அடி தண்ணீர் உள்ளது.

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து இடது, வலது மற்றும் பழைய ஆயக்கட்டு கால்வாய் என 3 பாசன கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்ட பகுதி வரை செல்லும் இந்த பாசன கால்வாய் மூலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு 900 சிறிய, பெரிய ஏரிகள், கிணறுகள் நீர் ஆதாரங்களை பெற்று வருகின்றன. சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறந்து விடுவதன் மூலம் அதனையொட்டியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்கிறது.

கிருஷ்ணகிரி அணையின் உபரிநீர், கால்வராயன் மலைத்தொடரில் பெய்யும் மழை இவற்றால் தான் சாத்தனூர் அணை நிரம்புகிறது. ஆனால் இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் இந்த ஆண்டு சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. வழக்கமாக ஜனவரி மாதம் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் மிக குறைவாகவே திறக்கப்பட்டது.

காரணம் திருவண்ணாமலை, புதுப்பாளையம், தானிப்பாடி, சாத்தனூர் ஆகிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். சாத்தனூர் அணையில் தற்போது 68.95 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளை கடந்தும் இதுவரை இந்த அணை ஒருமுறைகூட தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக அணையில் 30 அடிக்கு மேல் மண்ணும், சேறுமே நிரம்பி உள்ளது.

எனவே சாத்தனூர் அணையில் 40 அடி அளவிற்கு தான் தண்ணீர் இருக்கும் என்று பொதுப் பணித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக பெய்ய வேண்டிய மழை பொய்த்து போனாலும், அணையின் நீர்மட்டம், (பாசனத்திற்கு போக) ஜூன் மாதத்தில் 85 முதல் 90 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் கடுமையாக நிலவிவரும் வறட்சியின் காரணத்தால் வழக்கத்தைவிட அணையின் நீர்மட்டம் 20 அடி குறைந்து காணப்படுகிறது. எனவே இதே வறட்சி நிலவினால் அணையில் உள்ள தண்ணீர் 2 மாதங்களுக்கு மட்டுமே சப்ளை செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



இதேபோல் சாத்தனூர் அணையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள பாசன கால்வாய் பராமரிப்பு இல்லாததால் திறந்துவிடப்பட்ட தண்ணீரும் கடைமடை வரை பாயாமல் வீணாகி விவசாயமும் பொய்த்து விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கிறது. சாத்தனூர், தண்டராம்பட்டு பகுதிகளில் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு ஆழ்துளை கிணறுகள் எல்லாம் வற்றி கிடக்கிறது.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சக்தி கூறியதாவது:-

குடிநீர் பிரச்சினை உள்ள 90 இடங்களை கண்டறிந்து, அதனை சரிசெய்ய ரூ.2 கோடியே 67 லட்சத்திற்கு திட்டம் தயாரித்து மாவட்ட நீர்வளத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக கடுமையான வறட்சியால் முற்றிலும் பாதிக்கப்பட்ட 23 இடங்களில் ஆழ்துளை கிணறுகளை ரூ.27 லட்சம் செலவில் அமைத்துள்ளோம். இன்னும் 13 இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு கண்டறியப்பட்டு 90 இடங்களிலும் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.



Tags:    

Similar News