செய்திகள்

ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து -பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவு

Published On 2019-06-21 05:55 GMT   |   Update On 2019-06-21 07:31 GMT
சென்னையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் விளைவாக அந்த பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு ‘ப்ரீ பால் டவர்’ எனப்படும் ஒரு ராட்டினம் உள்ளது.

மிக உயரமான ராட்சத இரும்பு தூணின் இருபுறமும் இரும்பு தொட்டில்போல் அமைக்கப்பட்டு இருக்கும். அதில் பொதுமக்கள் அமர்ந்ததும், ஒன்றன்பின் ஒன்றாக மேலே செல்லும் இரும்பு தொட்டில்கள், அங்கிருந்து வேகமாக கீழே இறங்கும்.

இந்த ராட்டினத்தில் ஏராளமான பொதுமக்கள் ஏறி உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர். அந்த ராட்டினத்தின் ஒரு பகுதியில் உள்ள இரும்பு தொட்டில் ‘ரோப்’ திடீரென அறுந்ததால் அந்த தொட்டில் கீழே விழுந்தது.

நல்லவேளையாக இரும்பு தொட்டில் கீழே இறங்கி வந்தபோது குறைந்த உயரத்தில் இருந்து ‘ரோப்’ அறுந்து விழுந்ததால் அதில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

ராட்சத தூணின் உயரத்தில் இரும்பு தொட்டில் நிற்கும்போது ‘ரோப்’ அறுந்து விழுந்து இருந்தால் அதில் இருந்தவர்களின் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.

இதன் எதிரொலியாக அந்த பூங்காவை மூட வேண்டும் என காவல்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.   





Tags:    

Similar News