செய்திகள்

தாரமங்கலத்தில் லாரி மோதி ஆசிரியை சாவு-மகள் கண்முன்னே பரிதாபம்

Published On 2019-06-21 02:26 GMT   |   Update On 2019-06-21 02:26 GMT
தாரமங்கலத்தில் நகை வாங்குவதற்காக நடந்து சென்றபோது, மகள் கண்முன்னே லாரி மோதி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.
தாரமங்கலம் :

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் எபனேசர் ஜெயசங்கர். இவருடைய மனைவி கிறிஸ்டி அகஸ்டியா ராணி (வயது 44). இவர்களுக்கு டெய்சி (13) என்ற மகள் உள்ளார். இவர்கள் குடும்பத்தினருடன் சேலம் மாவட்டம் தாரமங்கலம் காலனியில் வசித்து வந்தனர். கிறிஸ்டி அகஸ்டியா ராணி ஓலைப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கிறிஸ்டி அகஸ்டியா ராணி நகை வாங்குவதற்காக தனது மகளுடன் தாரமங்கலம் பழைய போலீஸ் நிலையம் பின்புறமுள்ள ஒரு நகைக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகள் டெய்சி காயமின்றி உயிர் தப்பினார்.

தன் கண்முன்னே லாரி மோதி தாய் இறந்ததை பார்த்த மகள் டெய்சி, கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தாரமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் லாரி மோதி ஆசிரியை கிறிஸ்டி அகஸ்டியா ராணி பலியான சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் மனதை பதற வைக்கும் வகையில் உள்ளது. 
Tags:    

Similar News