செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை

Published On 2019-06-20 03:02 GMT   |   Update On 2019-06-20 03:02 GMT
நோணாங்குப்பம் அரசுப் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அரியாங்குப்பம்:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆண்டு இறுதி தேர்வு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை புதுவகுப்பு புகுவிழா எனும் தலைப்பில், அரசுப்பள்ளி மாணவர்களை ஆசிரியர்களே வரவேற்கும் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதேபோல் இந்த ஆண்டும் வகுப்பு தொடங்கிய முதல் நாளில் ஆசிரியர்கள், மாணவர்களை பல்வேறு முறையில் வரவேற்றனர்.

இந்தநிலையில் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களை பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

இதில் 5-ம் வகுப்பு ஆசிரியை சுபாஷினி கை கொடுத்தல், கைதட்டி நடனமாடி இருவரும் இடித்துக் கொள்ளுதல், கட்டிப்பிடித்தல், கை தட்டிக் கொள்ளுதல் ஆகிய 4 செய்முறைகளை படங்களாக வகுப்பறையில் ஒட்டியிருந்தார். இதில் எந்த முறையை மாணவர்கள் விரும்புகிறார்களோ அந்த முறையில் தன்னுடன் மாணவர்களை விளையாட சொல்லி மாணவர்களை மகிழ்வித்தார்.



மேலும் பாசத்துடன் கட்டி அணைத்தும் வரவேற்றது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பெரும்பாலும் மாணவர்கள் வகுப்பறையில் நுழையும்போது அச்சத்துடனே நுழைவார்கள். அந்த அச்சத்தினை போக்குவதற்காகவும், ஆசிரியர்களிடம் உள்ள இடைவெளியை குறைப்பதற்காகவும் இதுபோன்று மனம் நிறைந்த அன்புடன் செய்ததாக ஆசிரியை கூறினார்.

இதுபோன்று ஆசிரியை சுபாஷினி செய்த வீடியோ தொகுப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News