செய்திகள்

புதுவை சட்டசபையில் ஜூலையில் பட்ஜெட் - நாராயணசாமி தகவல்

Published On 2019-06-19 09:46 GMT   |   Update On 2019-06-19 09:46 GMT
மத்திய உள்துறை, நிதித்துறையின் ஒப்புதல் பெற்று ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பட்ஜெட் தொடர்பாக நானும், அமைச்சர்களும் துறைரீதியாக ஆய்வு நடத்தியுள்ளோம். புதுவையின் நிதிஆதாரம் பெருக்குவது, தொழில் நிறுவனங்களுக்கு சம்பளம் வழங்குவது, நலிந்துள்ள நிறுவனங்களை புனரமைப்பது போன்ற வி‌ஷயங்கள் பேசப்பட்டது.

சாலைகள், குடிநீர் பிரச்சினை, மின்விளக்கு போன்ற அத்தியாவசிய தேவைக்கு நிதி ஒதுக்குவது. இலவச அரிசி திட்டம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, சென்டாக் கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக சில முடிவு எடுக்கப்பட்டது.

மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற, வேலைவாய்ப்புகளை பெருக்க அமைச்சர்கள் முழு முயற்சி எடுத்து வருகின்றனர். காலியாக உள்ள பதவிகளை நிரப்ப கோப்புகளை தயாரித்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

விரைவில் காவலர் பணிக்கு தேர்வு நடைபெறவுள்ளது. சுமார் 350 முதல் 400 காவலர்கள் நியமிக்கப்படுவர். இதைத்தொடர்ந்து 700 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். செவிலியர், டாக்டர் நியமனம் செய்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

புதுவை அரசு துறைகளில் பல பதவிகள் காலியாக உள்ளது. இதை நிரப்ப துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மத்திய அரசு நிதிபெறுவது தொடர்பாகவும் கலந்தாய்வு செய்தோம். இன்னும் உள்ளாட்சி, சட்டத்துறை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதன்பின் கவர்னர் தலைமையில் பட்ஜெட் கலந்துரையாடல் நடைபெறும்.

மத்திய உள்துறை, நிதித்துறையின் ஒப்புதல் பெற்று ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

காங்கிரசை எழுச்சிப் பாதையில் கொண்டு செல்லும் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள். புதுவை மாநிலம் முழுவதும் நானும், காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, வட்டார நிர்வாகிகள் ராகுல் காந்தி பல்லாண்டு வாழ பிரார்த்தனை செய்துள்ளோம். ராகுல்காந்தி காங்கிரசை வழிநடத்தி செல்ல வேண்டியுள்ளோம். இந்த நாளில் ஏழை மக்களுக்கு மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறோம்.

நாட்டில் 11 கோடி மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை பெற்ற ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும். அதற்கான நடவடிக்கையில் காங்கிரசார் இறங்கியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் எம்.பி.க்கள் பதவியேற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. தாய்மொழி எங்கும் ஒலிக்க வேண்டும். தமிழ் மொழியில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News