செய்திகள்

உயிருக்கு போராடிய இளைஞருக்கு சிகிச்சை அளித்த முன்னாள் எம்.பி.

Published On 2019-06-19 07:14 GMT   |   Update On 2019-06-19 07:14 GMT
சென்னை அருகே நள்ளிரவில் வாகனம் மோதி உயிருக்கு போராடிய இளைஞருக்கு சிகிச்சை அளித்த முன்னாள் எம்பி ஜெயவர்தனின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
சென்னை:

தென்சென்னை பாராளுமன்ற தொகுதி முன்னாள் அ.தி.மு.க எம்.பி.யும் டாக்டருமான ஜெயவர்தன் நேற்று இரவு திருத்தணியில் நடந்த கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பினார்.

நுங்கம்பாக்கம் ஹாடஸ் ரோடு அருகில் இரவு 11 மணிக்கு அவர் காரில் வந்து கொண்டு இருந்தபோது ரோட்டில் இளைஞர் ஒருவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கேட்பாரற்று கிடந்ததை பார்த்தார். மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இளைஞரை ஏதோ ஒரு வாகனம் மோதி தள்ளி விட்டு சென்று இருந்தது தெரியவந்தது.

பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இளைஞரை பார்த்ததும் ஜெயவர்தன் அவசரமாக காரை நிறுத்தி கீழே இறங்கினார். ஜெயவர்தன் டாக்டர் என்பதால் அந்த இடத்திலேயே காயம்பட்டு கிடந்த இளைஞருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர் ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தார். அங்கேயே காத்து நின்று ஆம்புலன்ஸ் வந்த பிறகு வேனில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பி வைத்து விட்டு புறப்பட்டு சென்றார். அந்த வழியாக நடந்து சென்றவர்களும், வாகனத்தில் சென்றவர்களும் ஜெயவர்தனின் மனிதாபிமான செயலை பாராட்டினர்.
Tags:    

Similar News