செய்திகள்
பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள்.

திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

Published On 2019-06-17 09:43 GMT   |   Update On 2019-06-17 09:43 GMT
அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, திருமானூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10-ந்தேதி நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் டாக்டர்களை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தாக்குதலை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் டாக்டர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத அரசு டாக்டர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.மேலும் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 65 தனியார் மருத்துவமனைகள் இன்று மூடப்பட்டன. மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த உள் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று மாலை வழக்கம் போல் மருத்துவமனைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, திருமானூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சங்க தலைவர் அர்ஜூன் தலைமையில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 70 தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன.

இதே போல் திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.



Tags:    

Similar News