செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்

Published On 2019-06-17 04:46 GMT   |   Update On 2019-06-17 04:46 GMT
அதிக மீன்கள் கிடைத்தும் உரிய விலை இல்லாததால் ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம்:

மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு சென்றனர்.

3 மாத கால இடைவெளிக்கு பின்னர் கடலுக்குச் சென்றதால் பாக்ஜலசந்தி, மன்னார்வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்களை பிடித்துக்கொண்டு நேற்று காலை கரை திரும்பினர்.

மீனவர்களின் வலையில் இறால், நண்டு, கனவாய் மற்றும் பல வகையான மீன்கள் கிடைத்தன. எதிர் பார்த்ததை விட அளவுக்கு அதிகமான மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் நேற்று முழுவதும் ராமேசுவரம் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.

அதிக மீன் வரத்து காரணமாக நண்டு, இறால் போன்றவற்றின் விலையை குறைத்து வியாபாரிகள் கேட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக கிலோ ரூ. 570 வரை விலை போகும். ஆனால் நேற்று ரூ. 300 முதல் 400 வரை மட்டுமே விலை போனது.

3 மாதம் கழித்து கடலுக்கு சென்றும் உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையில் அதிக வரத்து காரணமாகவும், வேலையாட்கள் பிரச்சனையாலும் இறால் ஏற்றுமதியாளர்கள் இன்று கொள்முதல் செய்யமாட்டோம் என்று தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை ராமேசுவரத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது இறால்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், சிண்டிகேட் அமைத்து இறால்களை கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும், மீன்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஏற்றுமதியாளர்களின் முடிவால் இன்று (17-ந்தேதி) ஒருநாள் ராமேசுவரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக இன்று யாரும் கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. தடை முடிந்து 3 நாட்கள்கூட ஆகாத நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலை நிறுத்தம் காரணமாக வேறு பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடிக்க முகாமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News