செய்திகள்

எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் புதிய பாடத்திட்டம் - மத்திய சுகாதார துறை இயக்குனர் தகவல்

Published On 2019-06-17 03:19 GMT   |   Update On 2019-06-17 03:19 GMT
இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சுகாதார துறை இயக்குனர் டாக்டர் எஸ். வெங்கடே‌‌ஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் செவிலியர் மற்றும் மருத்துவ அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கான 9-வது பட்டமளிப்பு விழா நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கத்தில் நடந்தது. விழாவில் ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகே‌‌ஷ் அகர்வால் வரவேற்று பேசினார். ஜிப்மர் தலைவரும், துணை வேந்தருமான டாக்டர் வி.எம். கடோச் தலைமை தாங்கினார்.

விழாவில் மத்திய சுகாதார துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் எஸ். வெங்கடே‌‌ஷ் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



உலக தரத்திற்கு ஏற்ப இந்தியாவில் எம்.பி.பி.எஸ். பட்டபடிப்பில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அது சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்கும். வரும் கல்வி ஆண்டில் அந்த பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். அதில் மருத்துவமுறை, மருத்துவர்-நோயாளிகளுக்கு உள்ள உறவுமுறை ஆகியவை இடம் பெறும். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், புதிதாக தொடங்கப்படும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் கூட இந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும். நர்சிங் படிப்பிற்கும் தனியாக ஒரு மருத்துவ கவுன்சில் தொடங்க பாராளுமன்றத்தில் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த கவுன்சில் மூலம் செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் வழிநடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News