செய்திகள்

சென்னை ரவுடி சுட்டுக்கொலை - போலி என்கவுண்டர் என்று தந்தை பரபரப்பு புகார்

Published On 2019-06-16 09:42 GMT   |   Update On 2019-06-16 09:42 GMT
சென்னையில் ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்டது போலி என்கவுண்டர் என வல்லரசுவின் தந்தை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை:

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி வல்லரசு, 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் மாதவரம் பகுதியில் குடியேறினார்.

நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வியாசர்பாடியை சேர்ந்த போலீஸ்காரர் ரமேசுக்கு போன் செய்த வல்லரசு, குற்றவாளி ஒருவரை பிடித்து வைத்து இருப்பதாக கூறினார்.

இதையடுத்து போலீஸ்காரர் ரமேஷ், இன்னொரு போலீஸ்காரரான பவுன்ராஜையும் அழைத்துக் கொண்டு வியாசர்பாடி கார்டன் பகுதிக்கு சென்றார். அப்போது திடீரென வல்லரசு போலீஸ்காரர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். இதனையடுத்து மாதவரத்தில் பதுங்கி இருந்த வல்லரசுவை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

போலீசாரை வெட்டி விட்டு தப்பிய ரவுடி ஆனந்தன் கடந்த ஆண்டு இதே பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஓராண்டுக்குள் மீண்டும் போலீஸ் மீது கை வைத்த ரவுடி வல்லரசு, போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி உள்ளார்.

இந்த என்கவுண்டரை வல்லரசுவின் குடும்பத்தினர் போலி என்கவுண்டர் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக வல்லரசுவின் தந்தை சாமிக்கண்ணு கூறும் போது, ‘எனது மகனை போலீசார் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்றுள்ளனர் என்றும், இதனை சட்ட ரீதியாக அணுகப் போவதாகவும் கூறினார்’.

வல்லரசுவின் சகோதரி தன லட்சுமி கூறும்போது, ‘எனது தம்பியை போலீசார் இரவில் தூங்கவிடாமல் தொந்தரவு செய்தனர் என்றும் அவனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News