செய்திகள்

5 ஆண்டுகளாக பழைய டயர்களில் மறைத்து ரூ.15 கோடி சந்தன மரம் கடத்தல்

Published On 2019-06-15 12:08 GMT   |   Update On 2019-06-15 12:08 GMT
உடுமலை அருகே 5 ஆண்டுகளாக பழைய டயர்களில் மறைத்து ரூ.15 கோடி சந்தன மரம் கடத்தியது தொடர்பாக அந்த கும்பலின் தலைவனை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை:

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் சொயாப் என்ற குஞ்சப்பு (வயது 36). இவர் உடுமலை அருகே உள்ள தமிழக- கேரள எல்லையான இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15 கோடி சந்தன கட்டைகளை கடத்தியதாக மறையூர் வனத்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

குஞ்சப்பு சந்தனமரத்தை வெட்டுவதற்கு 6 பேரை வேலைக்கு அமர்த்தி கும்பல் தலைவனாக செயல்பட்டுள்ளார். வெட்டிய சந்தன மரங்களை துண்டுகளாக்கி சொகுசு காரில் ரகசிய அறை அமைத்து அதில் வைத்து கடத்தி மலப்புரத்தில் ஒரு குடோனில் பதுக்கி வைப்பார்.

2 ஆயிரம் கிலோ வரை சேர்ந்ததும் தமிழக பதிவு எண் கொண்ட லாரியில் சந்தன கட்டைகளை பழைய லாரி டயர்களில் மறைத்து ஆந்திராவில் உள்ள சந்தன ஆயில் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதுபோன்று கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15 கோடி சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று வனத்துறையினர் கூறினர்.
Tags:    

Similar News