செய்திகள்
எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் - மளிகை கடைக்காரர் கைது

Published On 2019-06-15 05:36 GMT   |   Update On 2019-06-15 05:36 GMT
கெட்டுப்போன தோசை மாவை திருப்பி கொடுத்ததால் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் பார்வதிபுரம், சாரதா நகரைச் சேர்ந்தவர் ஜெயமோகன், எழுத்தாளர்.

ஜெயமோகன், தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான புத்தகங்கள் எழுதி உள்ளார். ரஜினி நடித்த 2.0, விஜய் நடித்த சர்கார், ஆர்யா நடித்த நான் கடவுள், அங்காடித்தெரு, கடல் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும் எழுதி உள்ளார்.

ஜெயமோகன் நேற்று மாலை பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு தோசை மாவு வாங்கச் சென்றார்.

தோசை மாவை வீட்டிற்கு கொண்டு சென்று பிரித்து பார்த்தபோது அது கெட்டுப்போய் இருந்தது தெரிய வந்தது. உடனே ஜெயமோகன் அந்த தோசை மாவை மீண்டும் மளிகை கடைக்கு கொண்டு சென்றார்.

அதனை திருப்பி எடுத்துக் கொள்ளும்படி கூறினார். கடையில் உரிமையாளரின் மனைவி மட்டுமே இருந்தார். அவர், தோசை மாவை திருப்பி எடுக்க மறுத்தார்.

இதனால் ஜெயமோகனுக்கும், மளிகை கடை உரிமையாளரின் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மளிகை கடை உரிமையாளர் செல்வன் (வயது 51) அங்கு வந்தார்.

அவர், எழுத்தாளர் ஜெயமோகனை தகாத வார்த்தைகள் பேசியதோடு, சரமாரியாக தாக்கவும் செய்தார். இதில் காயம் அடைந்த ஜெயமோகன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி ஜெயமோகன், வடசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் செல்வனை கைது செய்தனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(பி), 323, 506/2 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஜெயமோகன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார். மளிகை கடையில் கெட்டுப்போன தோசை மாவை திருப்பிக் கொடுத்ததில் தகராறு ஏற்பட்டு தாக்கப்பட்டேன்.

இதில் என் கண்ணாடி உடைந்தது. அதன் பிறகு வீட்டிற்கு வந்த என்னை மளிகை கடைக்காரர் தொடர்ந்து வந்து என்னையும், மனைவியையும், மகளையும் வசை பாடினார். வீட்டிற்குள் நுழைய முயன்றார். எனவே தான் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தேன். இப்போது ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். எனக்கு சிறு காயங்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.

எழுத்தாளர் ஜெயமோகன் பதிவிட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


Tags:    

Similar News