செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி காலமானார்

Published On 2019-06-14 04:07 GMT   |   Update On 2019-06-14 06:04 GMT
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.ராதாமணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கு.ராதாமணி (வயது 67).

இவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக புற்றுநோயால் அவதிபட்டு வந்தார். இதனால் கு.ராதாமணி எம்.எல்.ஏ. சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான கண்டமங்கலம் அருகே உள்ள கழிஞ்சி குப்பம் கிராமத்தில் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் கு.ராதாமணி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார். ராதாமணி எம்.எல்.ஏ. இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

இதற்கிடையே தி.மு.க. முக்கிய பிரமுகர்களும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

கு.ராதாமணி எம்.எல்.ஏ. இறந்த தகவல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கார் மூலம் சென்னையில் இருந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு விரைந்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வந்ததும் கு.ராதாமணி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் கு.ராதாமணி எம்.எல்.ஏ.வின் உடல் ஆம்புலன்சு மூலம் அவரது சொந்த ஊரான கழிஞ்சிக்குப்பம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் அங்குள்ள மயானத்துக்கு அவரது உடல் எடுத்துச் செல்ல பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ராதாமணி எம்.எல்.ஏ. கண்டமங்கலம் அருகே உள்ள கழிஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் குப்புசாமி, தாய் மீனாட்சி.

ராதாமணி எம்.எல்.ஏ. ஆரம்ப காலத்தில் தி.மு.க.வில் கிளை செயலாளராக இருந்தார். பின்னர் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவராகவும் இருந்து வந்தார்.

தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத் தலைவராக இருந்து வந்தார். இவர் எம்.ஏ. படித்துள்ளார். ராதாமணி எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் ஆகவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராதாமணி எம்.எல்.ஏ. 63 ஆயிரத்து 757 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வேலு 56 ஆயிரத்து 845 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் 7 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் அடைந்துள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வின் எண்ணிக்கை 6-ஆக குறைந்துள்ளது.
Tags:    

Similar News