செய்திகள்
கைதான முகமது அசாருதீன்

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு: கோவை வாலிபர் கைது - மேலும் 5 பேருக்கு சம்மன்

Published On 2019-06-13 06:54 GMT   |   Update On 2019-06-13 07:33 GMT
கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முகமது அசாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டது.
கோவை:

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து 9 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது.

இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இலங்கையை உலுக்கிய இந்த கோர சம்பவத்துக்கு அந்த நாட்டில் செயல்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. அந்த அமைப்புக்கு தலைவனாக இருந்தவன் ஜக்ரன் ஹசீம் என்பவன் ஆவான். தொடர் குண்டு வெடிப்புகளின்போது இவனும் தற்கொலை தீவிரவாதியாக மாறி குண்டு வெடிப்பை நடத்தி இருந்தான்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் உதவியை பெற்று ஜக்ரன்ஹசீம் இந்த குண்டு வெடிப்புகளை நடத்தி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்க இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாக இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு தெரிவித்தது.

இதையடுத்து தீவிரவாதி ஜக்ரன்ஹசீமுக்கு சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்தன என்று அந்த நாட்டு விசாரணைக்குழு தீவிரமாக விசாரித்தது. அப்போது தமிழகத்தில் இருந்து ஜக்ரன்ஹசீமுக்கு உதவிகள் கிடைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கும் அளவுக்கு தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக கோவையில் சிலருடன் ஜக்ரன்ஹசீம் தொடர்பில் இருந்தது பேஸ்புக் தொடர்புகள் மூலம் தெரிய வந்தது.

கோவையில் ஜக்ரன் ஹசீமுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அனுதாபிகளாக இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. ஐ.எஸ். தீவிரவாதத்தின் கொள்கைகளை பரப்பும் வகையில் ஜக்ரன்ஹசீம் சில தடவை கோவை வந்து சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த தகவல்களை தொடர்ந்து தேசிய விசாரணைக்குழு கோவையில் உள்ள சில வாலிபர்களை கடந்த ஒரு மாதமாக தீவிரமாக கண்காணித்து வந்தது. அந்த வாலிபர்களின் செல்போன், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் தொடர்புகள் அனைத்தும் மிக ரகசியமாக பின்தொடரப்பட்டன. அப்போது கோவையில் உள்ள 6 வாலிபர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இருப்பதும் ஐ.எஸ். தீவிரவாத கொள்கைகளை பேஸ்புக் மூலம் பரப்பி வருவதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே தேசிய விசாரணைக் குழுவின் ஒரு பிரிவினர் கடந்த மாத இறுதியில் கொழும்பு சென்று விசாரித்தனர். அப்போது இலங்கை தீவிரவாதிகளுக்கும், கோவை வாலிபர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 30-ந்தேதி அந்த 6 வாலிபர்கள் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவை வாலிபர்களை கூண்டோடு பிடிக்க தேசிய விசாரணைக்குழு முடிவு செய்தது. இதற்கான அதிரடி நடவடிக்கைகள் நேற்று கோவையில் மேற்கொள்ளப்பட்டன.



கேரள மாநிலம் கொச்சியில் இருந்து துணை சூப்பிரண்டு விக்ரம் தலைமையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கோவை வந்தனர். பின்னர் அவர்கள் கோவையில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் சேர்ந்து அதிகாலை 5.30 மணி முதல் 7 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன் (32), போத்தனூர் சாலை திருமால் நகரை சேர்ந்த அக்ரம் ஜிந்தா(26), தெற்கு உக்கடம் ஷேக் இதய துல்லா(38), குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர்(29), போத்தனூர் மெயின் ரோடு உம்மர் நகரை சேர்ந்த சதாம் உசேன்(26), தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராகிம் என்கிற ஜாகின் ஷா(28) உள்பட 7 பேர் வீடுகளில் சோதனை நடத்தினர்.

முக்கிய குற்றவாளியான முகமதுஅசாருதீன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும், ரியாஸ் அபுபக்கர் போடலூரில் திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வருகிறான். சேக்இதயதுல்லா தேன் விற்பனை செய்து வருகிறான். சதாம்உசேன், அக்ரம் இருவரும் கோவையில் நகை கடைகள் வைத்துள்ளனர். இப்ராகிம் வாசனை பொருள் திரவியம் விற்பனை செய்து வருகிறான்.

சோதனை நடந்து கொண்டிருந்தபோதே முகமது அசாருதீனை கரும்பு கடை பகுதியில் அவர் நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

முகமது அசாருதீனின் டிராவல்ஸ் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லேப்- டாப், டைரி, பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் ஏர்கன்னில் பயன் படுத்தப்படும் 300 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப்டாப்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டுடிஸ்க்குகள், ஒரு இண்டர்நெட் உபகரணம், 13 சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் நோட்டீசுகள், கையேடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா, இப்ராகிம், ஷேக் இதயதுல்லா ஆகியோர் வீடுகளில் இருந்தும் சில ஆவணங்களை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மின்னணு சாதனங்களை டெல்லியில் உள்ள தேசிய விசாரணைக் குழு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த மின்னணு சாதனங்களில் பதிவாகி உள்ள தகவல்கள் விரைவில் தெரிய வரும்.

நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நடந்தது. பிறகு முகமது அசாருதீன் உள்பட 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரேஸ் கோர்சில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜஹரன் ஹசிமினுடன் முகமது அசாருதீன் முக நூல் மூலம் தொடர்பில் இருந்துள்ளதும், இவர்கள் 6 பேரும் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை சமூக வலை தளங்களில் பரப்பி வந்ததும் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பிற்கு இளைஞர்களை சேர்க்கும் நோக்கில் செயல்பட்டு இருப்பதும், அவ்வாறு சேர்ந்த வாலிபர்கள் மூலம் தமிழகம், கேரளாவில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த கும்பலின் தலைவனாக முகமது அசாருதீன் செயல்பட்டுள்ளார்.

முகமது அசாருதீன் ‘பேஸ்புக்‘கில் “கிளாபக் ஜிஎப்எக்ஸ்” என்று ஒரு பக்கத்தை உருவாக்கி நடத்தி வந்தான். ஐ.எஸ். கொடி மற்றும் லோகோவுடன் அவன் வடிவமைத்த பேஸ் புக் பக்கம் சமூக வலைத் தளங்களில் ஐ.எஸ். அனுதாபிகளால் அதிகம் பார்க்கப்பட்டது. இதை பயன்படுத்தி தமிழகத்தில் பலரை தீவிரவாதிகளாக மாற்றும் முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தென் இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை கால் ஊன்ற செய்ய முகமது அசாருதீன் மூலம் ஜக்ரன்ஹசீம் திட்டமிட்டு இருந்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றி நாச வேலை செய்ய வைக்க வேண்டும் என்பதே ஜக்ரன் ஹசீம், முகமது அசாருதீனின் திட்டமாக இருந்திருக்கலாம் என்று தேசிய விசாரணை குழுவினர் சந்தேகிக்கிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக ஜக்ரன்ஹசீமும், முகமது அசாருதீனும் சமூக வலைதளங்கள் மூலம் பேசி வந்து இருப்பதையும் தேசிய விசாரணை குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் முக்கிய தகவல்களை உருது மொழியில் பேசாமல் தமிழில் பேசி இருப்பதை தேசிய விசாரணைக்குழுவினர் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

முகமது அசாருதீன் நடத்தி வந்த கிளாபக் ஜிஎப்எக்ஸ் “பேஸ்புக்” பக்கத்தை தமிழ் நாட்டில் மட்டுமின்றி இலங்கையில் உள்ளவர்களும் பார்த்து வந்துள்ளனர். இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செயல்பாடுகளில் அதிக ஆதரவு கிடைத்தது இந்த பேஸ்புக் பக்கத்தால்தான் என்று கூறப்படுகிறது.

முகமது அசாருதீன் இத்தோடு நிற்காமல் ஐ.எஸ். ஆதரவு வகுப்புகளையும் கோவையில் நடத்தி வந்ததை தேசிய விசாரணைக் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். அந்த வகுப்புகளில் பங்கேற்ற இளைஞர்களிடம் அவன் கணிசமான பணத்தை வசூல் செய்துள்ளான். இந்த பணத்தை கொண்டு தமிழ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை வலிமையாக செயல்பட வைக்க முகமது அசாருதீன் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் மூலமாகவும் இந்த வகுப்புகளுக்கு பணம் பெறப்பட்டுள்ளது. அப்படி பணம் அனுப்பியவர்களை தேசிய விசாரணைக்குழுவினர் பட்டியலிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே காசர் கோட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் பல முக்கிய தகவல்களை தேசிய விசாரணைக்குழுவிடம் கூறியுள்ளான். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தேசிய விசாரணைக் குழுவினர் தயாராகி வருகிறார்கள்.

கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட காசர் கோட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவருடன் தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராகிம் என்கிற ஜாகின்ஷா நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு சட்ட பிரிவு 18, 18பி, 38 மற்றும் 39 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முக்கிய நபரான முகமது அசாருதீனை இரவு 8 மணியளவில் கைது செய்தனர். மற்ற 5 பேரையும் நேற்று இரவு விடுவித்தனர்.

அவர்கள் 5 பேரும் இன்று கொச்சியில் உள்ள தனி கோர்ட்டில் ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் கொடுத்தனர். கைதான அசாருதீனை நேற்று இரவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொச்சியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முகமது அசாருதீனையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தனி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக தமிழகம், கேரளாவில் உளவுப்பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News