செய்திகள்
கல்லணை காவிரி ஆற்றில் ஊற்று தோண்டி விதை விடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தியபோது எடுத்தபடம்.

காவிரி ஆற்றில் ஊற்று தோண்டி விதை தூவி விவசாயிகள் போராட்டம்

Published On 2019-06-13 04:56 GMT   |   Update On 2019-06-13 04:56 GMT
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத்தராத மத்திய-மாநில அரசை கண்டித்து காவிரி ஆற்றில் ஊற்று தோண்டி விதை தூவி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பூதலூர்:

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்சி காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு குறுவைக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத்தராத மத்திய-மாநில அரசை கண்டித்து காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்கம், தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கம், நமது மக்கள் கட்சியின் விவசாயப்பிரிவு ஆகிய விவசாய அமைப்புகள் இணைந்து கல்லணையில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி ஊற்று தோண்டி விதை விடும் போராட்டத்தை நடத்தினார்கள்.

குறுவை சாகுபடியை இழந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம், விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரியின் குறுக்கில் தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மீத்தேன், எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்திற்கு காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நமது மக்கள் கட்சியின் மாநில விவசாய பிரிவு தலைவர் குணசேகரன், காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்க பொது செயலாளர் பொன்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கல்லணையில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி விதைகளை தூவியும் மண்வெட்டியும், சுடும் மணலில் படுத்தும் கோ‌ஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தோகூர் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமுக்கு சென்று கலெக்டர் அண்ணாதுரையிடம் குறுவைக்கு தண்ணீர் தரவேண்டி முறையிட்டனர்.
Tags:    

Similar News