செய்திகள்

அமைச்சர் தங்கமணி பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய 2 பேர் கைது

Published On 2019-06-13 04:47 GMT   |   Update On 2019-06-13 04:47 GMT
தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்:

தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி பற்றி பொய்யான தகவல்கள் மற்றும் ஆபாசமான வார்த்தைகளை ‘வாட்ஸ்- அப்’பில் பதிவு செய்து, அவரது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் மர்மநபர்கள் பரப்பினர்.

இந்த பதிவு குமாரபாளையம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செல்போன் ‘வாட்ஸ்-அப்’பில் வேகமாக பரவியது. மேலும் இது அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், பிரமுகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமைச்சர் தங்கமணியை பற்றி ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் புகார் கொடுத்தனர்.

புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் தேவி தீவிரமாக விசாரணை நடத்தினார். விசாரணையில், குமாராபாளையம் கத்தேரி பிரிவு பகுதி சுப்பிரமணியன் (வயது 54), திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்த குமார்(49) ஆகியோர் ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறாக பரப்பியதாக தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து, திருச்செங்கோடு மாஜிஸ்திரேட்டு முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு, சம்பந்தப்பட்ட 2 பேரையும் 15 நாள் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சுப்பிரமணியனும், குமாரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News