செய்திகள்

திருச்சி காவிரி ஆற்றின் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

Published On 2019-06-12 14:06 GMT   |   Update On 2019-06-12 14:06 GMT
கர்நாடக அரசை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றின் மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி:

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா அரசு காவிரியில் இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டு, பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடக அரசு உடனே காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

8 வழிச்சாலைக்கு நிலங்களை கைப்பற்றக் கூடாது. புறம்போக்கில் உள்ள வீடுகளை இடிக்காமல் விவசாயிகள் மட்டும் வைத்திருக்கும் வீட்டை இடிக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற னர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறு நாள் திருச்சி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுக்கப்படும் என்றும், தொடர்ந்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அய்யாக்கண்ணு கூறினார்.

அதன்படி இன்று காலை திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலில் பாதி உடலை மணலில் புதைத்து இந்த போராட்டத் தில் ஈடுபட்டனர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சிறுநீரை குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்தனர். இதற்காக விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒரு பாட்டிலில் சிறுநீரை பிடித்து கொண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட வில்லை. தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் காவிரியில் குறுவை சாகுபடிக்காக கர்நாடகா அரசு தமிழகத்திற்கு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது முறை, ஆனால் பல வருடங்களாக கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்காமல் தமிழகத்தை முற்றிலும் வஞ்சிக்கிறது.

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை ஆணையம் ஆணை பிறப்பித்தும் கர்நாடகா அரசு அதனை துளியும் மதிக்காமல், தொடர்ந்து தண்ணீர் தர மறுக்கிறது.

எனவே உடனடியாக கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம். காவிரி ஆற்றில் சாக்கடை தண்ணீர் திறந்து விடப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

Similar News