செய்திகள்
பெல்ஜியம் வீரர்கள்

யூரோ கோப்பை: பெல்ஜியம், டென்மார்க் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்- ரஷியா வெளியேற்றம்

Published On 2021-06-22 09:51 GMT   |   Update On 2021-06-22 09:51 GMT
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம், டென்மார்க் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கோல் அடிப்படையில் ரஷியா வெளியேறியது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. ‘பி’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம்- பின்லாந்து அணிகள் மோதின.

 2-வது சுற்றுக்கு முன்னேறி இருந்த பெல்ஜியம் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. கோல் அடிக்கும் பல வாய்ப்புகளை பின்லாந்து வீரர்கள் தடுத்துவிட்டனர்.

74-வது நிமிடத்தில் ஓன்-கோல் மூலம் பெல்ஜியம் முன்னிலை பெற்றது. அந்த அணி வீரர் வெர்மலன் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில்பட்டது. அதை பின்லாந்து கோல் கீப்பர் ஹரடேஸ்கி பிடிக்க முயன்று கோல் வலைக்குள் தள்ளிவிட்டார்.

 81-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு 2-வது கோல் கிடைத்தது. புருனி தட்டிக் கொடுத்த பந்தை லூகாகு கோலாக்கினார்.

பின்லாந்து வீரர்களால் இறுதிவரை கோல் போட முடியவில்லை. முடிவில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெல்ஜியம் ஹாட்ரிக் வெற்றிபெற்றது. ரஷியாவை 3-0 என்ற கணக்கிலும், டென்மார்க்கை 2-1 என்ற கணக்கிலும் பெல்ஜியம் ஏற்கனவே வீழ்த்தி இருந்தது.

கோபன்ஹேகனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க்- ரஷியா அணிகள் மோதின. இதில் டென்மார்க் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

 டென்மார்க் அணியில் டேம்ஸ்கார்ட் (38-வது நிமிடம்), பவுல்சென் (59), கிறிஸ்டென்சென் (79), மெக்லே (82) ஆகியோர் கோல் அடித்தனர். ரஷிய அணியில் 70-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் சைபா கோல் அடித்தார்.

‘பி’ பிரிவில் பெல்ஜியம் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. டென்மார்க், பின்லாந்து, ரஷியா அணிகள் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் தலா 3 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் டென்மார்க் 2-வது இடத்தை பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 2-வது சுற்றில் வேல்சை சந்திக்கிறது.

பின்லாந்து 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிலைமை மற்ற பிரிவுகளில் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளின் தர வரிசையை பொறுத்து இருக்கும்.

ரஷியா 4-வது இடத்தைப் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறியது. அந்த அணியின் கோல் வித்தியாசம் மிகவும் மோசமாக இருந்தது.

‘சி’ பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவையும், ஆஸ்திரியா 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனையும் வீழ்த்தின. 



இந்த பிரிவில் நெதர்லாந்து 3 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், ஆஸ்திரியா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பிடித்தன. இந்த இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

உக்ரைன் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. மற்ற பிரிவில் 3 இடத்தை பிடிக்கும் அணிகளின் நிலையைப் பொறுத்து அடுத்த சுற்று வாய்ப்பு தெரியவரும். வடக்கு மாசிடோனியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறாமல் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

 ஆஸ்திரியா இரண்டாவது சுற்றில் இத்தாலியுடன் மோதுகிறது.
Tags:    

Similar News