செய்திகள்
பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள்

புரோ கபடி லீக்: டெல்லி, பெங்கால் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு தகுதி- தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

Published On 2019-09-23 10:01 GMT   |   Update On 2019-09-23 10:01 GMT
புரோ கபடி லீக்கில் டெல்லி மற்றும் பெங்கால் அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 10-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் விளையாடும் 12 அணிகளும் தலா 22 ஆட்டங்களில் ஆட வேண்டும். ‘லீக்’ முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறும்.

நேற்று நடந்த ஆட்டங்களில் மும்பை அணி 31-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 41-40 என்ற கணக்கில் ஜெய்ப்பூரையும் வீழ்த்தின.

இதுவரை 103 ஆட்டங்கள் முடிந்து விட்டன. நேற்றைய போட்டி முடிவின் மூலம் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின.

டெல்லி அணி 16 ஆட்டத்தில் 13 வெற்றி, 2 தோல்வி, ஒரு டையுடன் 69 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. பெங்கால் வாரியர்ஸ் 18 ஆட்டத்தில் 11 வெற்றி, 4 தோல்வி, 3 டையுடன் 68 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு 4 ஆட்டம் உள்ளது.

தமிழ் தலைவாஸ் முதல் அணியாக வெளியேற்றப்பட்டுள்ளது. 3 வெற்றி, 12 தோல்வி, 3 டையுடன் 30 புள்ளிகள் பெற்று தொடர்ந்து கடைசி நிலையில் இருக்கிறது. 4 ஆட்டம் எஞ்சியுள்ளது. இந்த ஆட்டங்களின் முடிவு எந்த பலனையும் தராது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் அரியானா-பாட்னா அணிகள் மோதுகின்றன. அரியானா 54 புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி பாட்னாவை மீண்டும் வீழ்த்தி 11-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பாட்னா 38 புள்ளியுடன் 10-வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரியானாவுக்கு பதிலடி கொடுத்து 7-வது வெற்றி வேட்கையில் இருக்கிறது.



இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி-பெங்களூர் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி பெங்களூரை மீண்டும் வீழ்த்தி 14-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பெங்களூர் அணி 50 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி டெல்லிக்கு பதிலடி கொடுத்து முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

நவீன் குமார் (டெல்லி)- பவன்குமார் ஷெர்வாத் நேருக்கு நேர் மோதும் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவன்குமார் 217 ரைடு புள்ளியும், நவீன் 197 ரைடு புள்ளியும் பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News