செய்திகள்
அமித் பன்ஹால்

எனது பயிற்சியாளருக்கு விருது வழங்குங்கள் - அமித் பன்ஹால் வேண்டுகோள்

Published On 2019-09-23 05:30 GMT   |   Update On 2019-09-23 05:30 GMT
என்னை உருவாக்கிய பயிற்சியாளர் அனில் தன்காரை துரோணாச்சார்யா விருதுக்கு பரிசீலனை செய்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று இந்திய வீரர் அமித் பன்ஹால் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

ரஷியாவில் நேற்று முன்தினம் முடிந்த 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5 வெண்கலப்பதக்கம் தான் வென்று இருந்தது. உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அமித் பன்ஹால் அளித்த ஒரு பேட்டியில், ‘எனக்கு விருது கிடைக்க வேண்டும் என்று நான் கவனம் செலுத்தவில்லை. ஆனால் என்னை உருவாக்கிய பயிற்சியாளர் அனில் தன்காரை துரோணாச்சார்யா விருதுக்கு பரிசீலனை செய்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். அவருடைய வழிகாட்டுதல் இல்லாவிட்டால் நான் இந்த நிலைக்கு வந்து இருக்கமாட்டேன். எனது பயிற்சியாளருக்கு விருது வழங்கினால் அது எனக்கு கிடைத்தது போன்றதாகும். இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். விருது பெரிய விஷயம் அல்ல. அடுத்து ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று போட்டி வருகிறது. அதில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்’ என்று தெரிவித்தார்.

தேசிய போட்டியில் பதக்கம் வென்றுள்ள அனில் தன்கார் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தது கிடையாது. ‘அமித் பன்ஹால் என் மீதான பாசத்தில் தெரிவித்த கருத்துக்கு நன்றி’ என்று அனில் தன்கார் கூறியுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான அமித் பன்ஹால் 2012-ம் ஆண்டில் அம்மை நோய்க்கு சிகிச்சை பெற எடுத்த மருந்தினால் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிசீலனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News