செய்திகள்
ஷகிப் அல் ஹசன்

டி 20 முத்தரப்பு தொடர் - ஷகிப் அல் ஹசன் அதிரடியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்

Published On 2019-09-21 16:36 GMT   |   Update On 2019-09-21 16:36 GMT
டாக்காவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் 6வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்.
டாக்கா:

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் வங்காளதேசம், ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் டி20 முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், இன்று நடைபெற்ற 6-வது போட்டியில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹஸரத்துல்லா சசாய் அதிகபட்சமாக 47 ரன்னும், ரஹமதுல்லா கர்பாஸ் 29 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில், ஷபிகுல்லா ஷபிக் 23 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஆனாலும் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு முஷ்பிகுர் ரஹிம் ஒத்துழைப்பு அளித்தார். ரஹிம் 28 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய வீரர்கள் நிலைக்கவில்லை.

ஷகிப் அல் ஹசன் தனி ஆளாக போராடி வங்காளதேசத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் எடுத்தார். கடைசியில், வங்காளதேசம் அணி 19 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Tags:    

Similar News