செய்திகள்
பவுமா

நாங்கள் முற்றிலும் தோற்றுவிடவில்லை: தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் பவுமா

Published On 2019-09-19 09:56 GMT   |   Update On 2019-09-19 09:56 GMT
மொகாலி டி20 கிரிக்கெட் போட்டியில் நாங்கள் முற்றிலும் தோற்றுவிடவில்லை என்று தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் பவுமா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 149 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் டி காக் 52 ரன்களும், அறிமுக வீரர் பவுமா 49 ரன்களும் சேர்த்தனர். இருவரும் களத்தில் நிற்கும்போது தென்ஆப்பிரிக்கா எளிதாக 180 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி பவுலர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா டெத் ஓவர்களில் ரன்கள் குவிக்க தவறிவிட்டது.

பின்னர் பேட்டிங் செய்த இந்தியா 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றது.  இந்தியா வெற்றி பெற்றாலும், நாங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படவில்லை என்று பவுமா தெரிவித்துள்ளார்.

பவுமா இதுகுறித்து கூறுகையில் ‘‘முதல் 10 முதல் 12 ஓவர் வரை நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். நல்ல தொடக்கம் கிடைத்ததை கடைசி வரை நாங்கள் சரியாக கொண்டு செல்லவில்லை. 12 முதல் 15 ஓவர்களுக்கிடையில் எங்களது ஆட்டத்தை இழந்தோம்.

டேவிட் மில்லர் 13-வது ஓவரில் களம் இறங்கும்போது, நாங்கள் வலிமையான நிலையில் இருந்தோம். அப்போது 180 ரன்களை எட்டும் வாய்ப்பு இருந்தது. அந்த உத்வேகத்தை நானும் மற்ற வீரர்களும் பெற தவறிவிட்டோம். நாங்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டோம் என்று நினைக்கவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News