செய்திகள்
ஜடேஜா - விராட் கோலி

7 விக்கெட்டில் வெற்றி - பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

Published On 2019-09-19 06:22 GMT   |   Update On 2019-09-19 06:22 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டை தெரிவித்துள்ளார்.
மொகாலி:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டில் வெற்றிபெற்றது.

மொகாலியில் நடந்த 2-வது போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது.

கேப்டன் குயின்டன் டிகாக் 37 பந்தில் 52 ரன்னும் (8 பவுண்டரி), பவுமா 43 பந்தில் 49 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். தீபக் சாஹர் 2 விக்கெட்டும், சைனி, ஜடேஜா, ஹர்திக்பாண்டியா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இந்தியா 150 ரன் இலக்கை 6 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது. இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கேப்டன் விராட்கோலி 52 பந்தில் 72 ரன்னும், தவான் 31 பந்தில் 40 ரன்னும் (4பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பெகல்வாயோ, ‌ஷம்சி, பிஜோர்ன் போர்ச்சன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் இருந்தது. ஆனால் நமது பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு தென்ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தனர். அவர்களது செயல்பாடு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.



புதுமுக வீரர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி பரிசோதனை செய்து வருகிறோம். 20 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய அணிக்காக விளையாடுவது அனைவருக்கும் பெருமை அளிக்ககூடிய ஒன்றாகும். அது எந்த வகையான போட்டியாக இருந்தாலும் பெருமைதான். அணி வெற்றிபெறுவது தான் முக்கியமானது. அதற்கு ஏற்றவாறு விளையாடுவது தான் முக்கியம்.

கிரிக்கெட் வாழ்க்கையில் எனது சிறந்த 20 ஓவர் ஆட்டமாக நினைவுபடுத்துகிறீர்கள். உலக கோப்பைக்காக நான் கூடுதல் உத்வேகத்துடன் ஆடுகிறேன்.

இவ்வாறு கோலி கூறி உள்ளார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 22-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது.
Tags:    

Similar News