செய்திகள்
குயின்டன் டி காக்

டி காக், புவுமா ஆட்டத்தால் இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா

Published On 2019-09-18 15:13 GMT   |   Update On 2019-09-18 15:13 GMT
டி காக் 52 ரன்களும், பவுமா 49 ரன்களும் அடிக்க இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹென்ரிக்ஸ் திணற டி காக் அவரது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தீபக் சாஹர் பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஹென்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிய பவுமாக களம் இறங்கினார். டி காக் - பவுமா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டி காக் 37 பந்தில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வான் டெர் டஸ்சன் 1 ரன்னில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 11.2 ஓவரில் 88 ரன்கள் குவித்திருந்தது.

அதன்பின் ரன் வேகம் குறைய ஆரம்பித்தது. பவுமா 43 பந்தில் 49 ரன்கள் சேர்த்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் 18 ரன்னில் ஆட்டமிழக்க, தென்ஆப்பிரிக்கா 150 ரன்களை தொடுமா? என்ற சந்தேகம் எழுந்தது.



18-வது ஓவரில் தீபக் சாஹர் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும், 19-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தி ரன்னை சிறப்பாக கட்டுப்படுத்தினர்.



சைனி வீசிய கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்கா 16 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டும் சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News