செய்திகள்
புரோ கபடி 2019

9-வது வெற்றி ஆர்வத்தில் உ.பி.யோதா - மும்பையுடன் இன்று மோதல்

Published On 2019-09-18 06:35 GMT   |   Update On 2019-09-18 06:35 GMT
புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பையுடன் மோத உள்ள உ.பி. யோதா அணி 9-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
புனே:

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

அதன்படி ஒரு அணிக்கு 22 ஆட்டம் இருக்கும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இதுவரை 94 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. நேற்றைய ஓய்வுக்கு பிறகு இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நிகேஷ்குமார் தலைமையிலான உ.பி.யோதா- பசல் தலைமையிலான மும்பை அணிகள் மோதுகின்றன.

உ.பி.யோதா அணி 8 வெற்றி, 5 தோல்வி, இரண்டு டையுடன் 47 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பையை ஏற்கனவே 27-23 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியை பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

உ.பி.யோதா அணியில் ஸ்ரீகாந்த் ஜாதவ், சுமித், ரிஷாங்க் தேவதிதா, கேப்டன் நிகேஷ்குமார், சுரேந்தர் ஹில் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

மும்பை அணி 7 வெற்றி, 7 தோல்வி, ஒரு டையுடன் 43 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி உ.பி.யோதாவுக்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

மும்பை அணியில் அபிஷேக் சிங், கேப்டன் பசல், சந்தீப் நர்வால், அர்ஜூன் கேஷ்வால் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் புனே- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன.

புனே அணி 5 வெற்றி, 9 தோல்வி, 2 டையுடன் 34 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தமிழ் தலைவாசை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. இரு அணிகளும் சென்னையில் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்து இருந்தது.

தமிழ்தலைவாஸ் அணி ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த அணி 3 வெற்றி, 11 தோல்வி, இரண்டு டையுடன் 27 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் தோற்றது அந்த அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஆகும். தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News