செய்திகள்
கோப்பு படம்

புரோ கபடி ‘லீக்’ போட்டி - 8-வது வெற்றி யாருக்கு? உ.பி.-ஜெய்ப்பூர் இன்று மோதல்

Published On 2019-09-16 07:18 GMT   |   Update On 2019-09-16 07:18 GMT
புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.
புனே:

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெற்று வருகிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.

ஜெய்ப்பூர் அணி 7 வெற்றி, 7 தோல்வி, 1 டையுடன் 42 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. உ.பி.யோதா 7- வெற்றி, 5 தோல்வி, 2 டையுடன் 42 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. பாயிண்டுகள் வித்தியாசம் கணக்கில் உ.பி. அணி பின்தங்கி இருக்கிறது.

8-வது வெற்றியை பெறப்போவது ஜெய்ப்பூர் அணியா? உ.பி.யோதாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெறும் அணி 5-வது இடத்திற்கு முன்னேறும்.

உ.பி.யோதா அணி ஏற்கனவே ஜெய்ப்பூரை 31-24 என்ற கணக்கில் வென்று இருக்கிறது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் ஆடும். ஜெய்ப்பூர் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

ஜெய்ப்பூர் அணியில் தீபக் ஹூடா (99 புள்ளி), சந்தீப்குமார் துல் (54 புள்ளி) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி இந்த போட்டித்தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி 12 வெற்றி, 2 தோல்வி, 1 டையுடன் 69 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியை மீண்டும் வீழ்த்தி 13-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணியின் நட்சத்திர வீரர் நவீன்குமார் 185 ரைடு புள்ளிகள் பெற்றுள்ளார். அவர் டெல்லியின் துருப்பு சீட்டாக இருக்கிறார்.

தெலுங்கு டைட்டன்ஸ் 4 வெற்றி, 8 தோல்வி, 2 டையுடன் 30 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே டெல்லியிடம் 33-34 என்ற புள்ளி கணக்கில் தோற்று இருந்தது. இந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் சித்தார்த் தேசாய் (113 புள்ளி), விஜய் பரத்வாஜ் (53 புள்ளி) போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News