செய்திகள்
ரோகித் சர்மா

ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவார்: தேர்வுக்குழு தலைவர்

Published On 2019-09-12 12:04 GMT   |   Update On 2019-09-12 12:04 GMT
தென்ஆப்பிரிக்கா தொடரில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவார். அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு வழங்கப்படும் என தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால், ரோகித் சர்மாவை டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறக்க அணி நிர்வாகம் விரும்பியதில்லை. இதனால் வாய்ப்பு கிடைக்கும்போது 5-வது அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கினார். தற்போது ரகானே, ஹனுமா விஹாரி அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

இதனால் ரோகித் சர்மாவுக்கு ஆடும் லெவன் அணியில் விளையாட இடம் கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கிடையே கேஎல் ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இருந்து கேஎல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதை உறுதி செய்யும் வகையில் தென்ஆப்பிரிக்கா தொடரில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ரோகித் சர்மா இந்திய அணியில் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று போட்டிகளிலும் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார். மேலும் போர்டு பிரெசிடென்ட் லெவன் அணிக்காகவும் தொடக்க வீரராக களம் இறங்குவார். டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்ய போதுமான அளவு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News