செய்திகள்
மேரிகோம்

முதல் விளையாட்டு வீராங்கனை - பத்மவிபூ‌ஷன் விருதுக்கு மேரிகோம் பெயர் பரிந்துரை

Published On 2019-09-12 06:55 GMT   |   Update On 2019-09-12 06:55 GMT
2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூ‌ஷன் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரும் பத்மபூஷன் விருத்துக்கு பிவி சிந்து பெயரும் மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அதற்கு அடுத்தப்படியாக பத்ம விபூ‌ஷன் விருது வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூ‌ஷன் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் விளையாட்டு வீராங்கனை ஆவார்.

மேரிகோம் ஏற்கனவே பத்மபூ‌ஷன் விருதை 2013-ம் ஆண்டும், பத்மஸ்ரீ விருதை 2006-ம் ஆண்டும் பெற்று இருந்தார்.

பத்மவிபூ‌ஷன் விருதை பெற இருக்கும் 4-வது விளையாட்டு நபர் என்ற பெருமையை மேரிகோம் பெறுவார்.

2007-ம் ஆண்டு செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தும், 2008-ம் ஆண்டு கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கரும், மலையேறும் வீரர் எட்மண்டு ஹிலாரியும் (நியூசிலாந்து) பத்மவிபூ‌ஷன் விருதை பெற்றிருந்தனர்.

36 வயதான மேரிகோம் 6 முறை உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலபதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு மேரிகோமை பாராளுமன்ற மேல்சபைக்கு நியமன எம்.பி.யாக பா.ஜனதா அரசு நியமித்தது.

உலக பேட்மிண்டன் போட்டியில் சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்த பி.வி.சிந்து பத்மபூ‌ஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது நாட்டில் வழங்கப்படும் 3-வது உயரிய விருது ஆகும்.

2017-ம் ஆண்டு அவர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் இறுதிப்பட்டியலில் அவர் இடம்பெற முடியாமல் போனது. 2015-ம் ஆண்டு பி.வி.சிந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு வினிஷ்போகத் (மல்யுத்தம்), ஹர்மன்பிரீத் கவூர் (கிரிக்கெட்) ரணிராம்பால் (ஆக்கி), சுமாஷிரு (துப்பாக்கி சுடுதல்), மணிக்கா பத்ரா (டேபிள் டென்னிஸ்), தஷி மற்றும் நுங்ஷி மாலிக் (மலையேறுதல்) ஆகிய 7 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய விளையாட்டு அமைச்சகம் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 9 பேரும் வீராங்கனைகள் ஆவார்.

பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதி பெயர் விவரங்களை ஜனவரி 25-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும்.
Tags:    

Similar News