செய்திகள்
கிறிஸ் கெய்ல், வால்டன்

‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்லின் அதிரடி சதம் வீண்: எதிரணி 242 இலக்கை எட்டி சாதனை

Published On 2019-09-11 11:04 GMT   |   Update On 2019-09-11 11:04 GMT
கரீபியன் பிரிமீயர் லீக்கில் கிறிஸ் கெய்ல் 54 பந்தில் சதம் அடித்தாலும், எதிரணி 242 ரன் இலக்கை எட்டி சாதனைப் படைத்தது.
கரீபியன் பிரிமீயர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஜமைக்கா தல்லாவாஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளும் மோதின. செயின்ட் கிட்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் கிறிஸ் கெய்ல், பிலிப்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிலிப்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் கிறிஸ் கெய்ல் உடன் வால்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி செயின்ட் கிட்ஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. வால்டன் 36 பந்தில் 3 பவுண்டரி, 8 சிக்சருடன் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கிறிஸ் கெய்ல் 54 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 62 பந்தில் 7 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 116 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இருவரின் அதிரடியால் ஜமைக்கா தல்லாவாஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது. பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் செயின்ட் கிட்ஸ் அணியின் தாமஸ், லீவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லீவிஸ் 18 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 53 ரன்கள் குவித்தார். தாமஸ் 40 பந்தில் 71 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 85 ரன்கள் குவித்தது.



அடுத்து வந்த எவன்ஸ் 20 பந்தில் 41 ரன்கள் குவித்தார். அதன்பின் வந்த பிராத்வைட், முகமது டக்அவுட் ஆனாலும் ப்ரூக்ஸ் 15 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். பேபியன் ஆலன் ஆட்டமிழக்காமல் 15 பந்தில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க, செயின்ட் கிட்ஸ் 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

டி20 கிரிக்கெட்டில் இது 2-வது மிகப்பெரிய சேஸிங்  ஆகும். இதற்கு முன் ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக சேஸிங்கில் 245 ரன்கள் குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எதிரணி வெற்றி பெற்றதால் 54 பந்தில் அடித்த சதம் வீணானது.
Tags:    

Similar News