செய்திகள்
2009-ல் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல்

வீரர்கள் மறுப்புக்கு இந்தியாதான் காரணம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை

Published On 2019-09-11 10:03 GMT   |   Update On 2019-09-11 11:26 GMT
இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடக்கூடாது என்று இந்தியா வறு்புறுத்தியதாக பாகிஸ்தான் எழுப்பிய குற்றச்சாட்டை இலங்கை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
2009 பாகிஸ்தான் சுற்று பயணத்தின்போது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி சர்வதேச அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. ஜிம்பாப்வே அணி மட்டும் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அந்நாட்டுக்கு சென்று விளையாடியது.

இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது.

இந்த போட்டியில் விளையாட விருப்பம் உள்ள வீரர்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இலங்கை 20 ஓவர் அணி கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன்கள் மேத்யூஸ், சன்டிமால் மற்றும் திசாரா பெரேரா உள்பட 10 வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் ஆட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

10 வீரர்கள் புறக்கணிப்பு காரணமாக இலங்கை அணி திட்டமிட்டப்படி பாகிஸ்தான் செல்லுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை இலங்கை வீரர்கள் புறக்கணிப்பதற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் தொழில் நுட்ப மந்திரி பவத் உசேன் சவுத்ரி குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் ‘‘இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் ஆட மறுப்பதற்கு இந்தியாதான் காரணம். பாகிஸ்தானில் ஆடினால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாது என்று அவர்களை இந்தியா மிரட்டியது. இதன் காரணமாகவே அவர்கள் ஆட மறுத்துவிட்டனர். இதை விளையாட்டு வர்ணனையாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.



இது உண்மையிலேயே மலிவான தந்திரமாகும். விளையாட்டில் இப்படி மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் இந்தியாவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இந்திய விளையாட்டு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மிகவும் மலிவானது.

இவ்வாறு பாகிஸ்தான் மந்திரி கூறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தியாவின் வற்புறுத்தல் காரணமாகத்தான் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் தொடரை புறக்கணித்தனர் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

2009 சம்பவத்தை மனதில் வைத்து அவர்கள் முடிவை எடுத்துள்ளன. நாங்கள் நாங்கள் வலுவான அணியை பாகிஸ்தான் அனுப்புவோம். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம்’’ என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News