செய்திகள்
5 விக்கெட் எடுத்த ரஷித் கான்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் - 3ம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 237/8

Published On 2019-09-07 12:24 GMT   |   Update On 2019-09-07 12:24 GMT
வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் சட்டோகிராமில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் ரஹ்மத் ஷா சதம் அடித்தார். அவர் 102 ரன் எடுத்து அவுட் ஆனார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 271 ரன் எடுத்துள்ளது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அஸ்கர் ஆப்கன் 92 ரன்னிலும், அப்சர் சேசாய் 41 ரன்னிலும் அவுட் ஆனார்கள். கேப்டன் ரஷித் கான் அதிரடியாக விளையாடி 61 பந்தில் 51 ரன்கள் அடிக்க ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வங்காளதேச அணி சார்பில் தைஜூல் இஸ்லாம் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் ஆப்கானிஸ்தானின் நேர்த்தியான பந்துவீச்சில் சிக்கியது. இதனால் 208 ரன்னில் ஆல் அவுட்டானது. மொமினுல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். மொசாடாக் உசேன் 48 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டும், மொகமது நபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.



இதையடுத்து, 137 ரன்கள் முன்னிலையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இப்ராகிம் சட்ரான் 82 ரன்னிலும், அஷ்கர் ஆப்கன் 50 ரன்னிலும் அவுட்டாகினர்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. அப்சர் சசாய் 34 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

வங்காளதேசம் சார்பில் ஷகிப் அல் அசன் 3 விக்கெட்டும், தஜுல் இஸ்லாம், நயிம் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இன்னும் இரு தினங்கள் மீதமுள்ள நிலையில் 374 ரன்கள் முன்னிலை வகிக்கும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News