செய்திகள்
சுராஜித் கங்குலி

இளம் வீராங்கனையிடம் அத்துமீறல் - கோவா நீச்சல் பயிற்சியாளர் மீது கற்பழிப்பு வழக்கு

Published On 2019-09-06 05:25 GMT   |   Update On 2019-09-06 05:25 GMT
இளம் வீராங்கனையிடம் தவறாக நடந்துகொண்ட கோவா நீச்சல் பயிற்சியாளர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
பானாஜி:

கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர் சுராஜித் கங்குலி. இவர் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த 15 வயது வீராங்கனையிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பானது.

அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லுவது பதிவாகி இருக்கிறது. பயிற்சியாளர், பாதிக்கப்பட்ட வீராங்கனை ஆகிய இருவரும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் குறித்து கோவா போலீசார், பயிற்சியாளர் சுராஜித் கங்குலி மீது கற்பழிப்பு, மானபங்கப்படுத்துதல், தீய நோக்கத்துடன் தவறாக நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின் படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போலீசார் பல தனிப்படை அமைத்து தலைமறைவான பயிற்சியாளரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சுராஜித் கங்குலியை, அந்த மாநில நீச்சல் சங்கம் உடனடியாக நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து இருக்கும் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

அத்துடன் அந்த பயிற்சியாளர் நாட்டில் எந்தவொரு இடத்திலும் பயிற்சியாளர் பணியில் சேர முடியாத வகையில் இந்திய நீச்சல் சம்மேளனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Tags:    

Similar News