செய்திகள்
ஸ்மித்

ஆஷஸ் தொடரில் நான்கு இன்னிங்சில் மூன்று சதம்: சச்சின் சாதனையை முறியடித்தார் ஸ்மித்

Published On 2019-09-05 13:43 GMT   |   Update On 2019-09-05 13:43 GMT
ஓல்டு டிராபோர்டு டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் விரைவாக 26 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளினார் ஸ்டீவ் ஸ்மித்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். இவரது சதத்தால் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

லார்ட்ஸ் டெஸ்டில் ஆர்சர் வீசிய பந்தில் காயம் அடைந்தாலும், முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். மூளையளர்ச்சி காரணமாக 2-வது இன்னிங்சில் களம் இறங்கவில்லை.

ஹெட்டிங்லேயில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஸ்மித் களம் இறங்கவில்லை. மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று தொடங்கிய 4-வது டெஸ்டில் இடம்பிடித்தார்.

மழையால் நேற்று 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. நேற்றைய முதல் நாளில் ஸ்மித் 60 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அவர் சதம் அடித்தார்.

சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் 26-வது சதம் இதுவாகும். மேலும் இந்த ஆஷஸ் தொடரில் நான்கு இன்னிங்சில் விளையாடியுள்ளார். இதில் மூன்று சதங்கள் அடித்துள்ளார்.



டான் பிராட்மேன் 69 இன்னிங்சில் 26 சதங்கள் அடித்ததுதான் அதிவேமாக 26 சதங்கள் அடித்த சாதனையாக இருந்து வருகிறது. அதன்பின் சச்சின் தெண்டுல்கர் 136 இன்னிங்சில் அடித்து 2-வது இடத்தில் இருந்தார்.

தற்போது ஸ்மித் 121 இன்னிங்சில் அடித்து சச்சின் தெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். சுனில் கவாஸ்கர் 144 இன்னிங்சிலும், ஹெய்டன் 145 இன்னிங்சில் 26 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News