செய்திகள்
இந்திய அணி வீரர் பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்திய மகிழ்ச்சியில்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் - இந்திய அணி ரன் குவிப்பு - பும்ரா அபார பந்து வீச்சு

Published On 2019-08-31 23:14 GMT   |   Update On 2019-08-31 23:14 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, விஹாரி சிறப்பான பேட்டிங்கும், பும்ராவின் அபார பந்து வீச்சிலும் இந்திய அணி முன்னிலை.
கிங்ஸ்டன்:

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் லோகேஷ் ராகுல் (13 ரன்), அடுத்து வந்த புஜாரா (6 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர்.இதன் பின்னர் மயங்க் அகர்வாலும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். மயங்க் அகர்வால் 55 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் ரஹானே களம் கண்டார்.

மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி தனது 22-வது அரைசதத்தை நிறைவு செய்தார். கோலி 55 ரன்களில் இருந்த போது, கெமார் ரோச்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி இருக்க வேண்டியது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். இரண்டு டி.ஆர்.எஸ். வாய்ப்பையும் வெஸ்ட் இண்டீஸ் வீணாக்கி விட்டபடியால் அவர்களால் அப்பீல் செய்ய முடியவில்லை. இதற்கிடையே ரஹானே 24 ரன்களில் (55 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார்.

அடுத்து ஹனுமா விஹாரி வந்தார். அணியின் ஸ்கோர் 202 ரன்களாக உயர்ந்த போது கோலி (76 ரன், 163 பந்து, 10 பவுண்டரி) ஹோல்டரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஹாமில்டனிடம் சிக்கினார். அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், விஹாரியுடன் கைகோர்த்தார். வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும், ரிஷாப் பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹோல்டர் வீசிய பந்தை சந்தித்த ரிஷாப் பண்ட் (27 ரன்) பந்து ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் என்று நினைத்து தடுத்து ஆட முற்பட்டார். ஆனால் ‘இன்ஸ்விங்’ ஆன பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. 7-வது விக்கெட்டுக்கு வந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 16 ரன்னில் வீழ்ந்தார். அவர் கார்ன்வால் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

நிதானம் காட்டிய விஹாரி 3-வது அரைசதத்தை கடந்து நிலைத்து நின்று அசத்தினார். அவருக்கு 79 ரன்னில் இருந்த போது நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கினார். பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து தப்பினார். 126 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்து இருந்தது.  தொடர்ந்து 8 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சர்மா 80 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் எடுத்து அணியின் ரன் விகிதத்தை உயர்த்திய போது பிராத்வெயிட் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய சமி வந்த வேகத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அணியின் ஸ்கோர் 416 ரன்களாக உயர்ந்த போது விஹாரி (111 ரன், 225 பந்து, 16 பவுண்டரி) ஹோல்டரின் பந்து வீச்சில் ரோச்சிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.  இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 416 ரன்களை குவித்தது.  

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும், கார்ன்வால் 3 விக்கெட்டும், பிராத்வெயிட், ரோச் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.



இதனை தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிராத்வெயிட், ஜான் கேம்ப்பெல் களம் இறங்கினர்.  இந்திய அணியின் அபார பந்து வீச்சில் ஆட்டத்தின்6.4வது ஓவரில் ஜான் கேம்ப்பெல் 10 (38) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக களம் இறங்கிய பிராவோ, ப்ரோக்ஸ், ரோஸ்டன் சேஸ் அடுத்தடுத்து விகெட்களை பறிகொடுத்தனர்.  அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர் பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் களம் இறங்கிய ஹெட்மயர் (34), ஜாசன் ஹோல்டர் (18) தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர்.  தொடர்ந்து பும்ரா தனது அபார வீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.  இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹமில்டன் 2 ரன்களுடனும், கான்வால் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்களும், சமி 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News