செய்திகள்
இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர்

ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

Published On 2019-08-22 04:58 GMT   |   Update On 2019-08-22 04:58 GMT
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது.
லீட்ஸ்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழை பாதிப்புக்கு இடையே லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. எனவே ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

முதலாவது டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சதம் அடித்த ஸ்டீவன் சுமித் 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 92 ரன்கள் குவித்து அசத்தினார். 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்டீவன் சுமித்தின் கழுத்து பகுதியில் பலமாக தாக்கியதால் தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக லபுஸ்சேன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியிலும் ஆடவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் தனது அசுர வேகத்தின் ஆஸ்திரேலிய அணியினரை அச்சுறுத்தி வருகிறார். அவரை ஆஸ்திரேலிய வீரர்கள் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இல்லையெனில் அவரது பவுன்சர் பந்து வீச்சு பேட்ஸ்மேன்களை பதம் பார்க்காமல் இருக்காது.

இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித் ஆகியோர் மட்டுமே நிலைத்து நின்று ஆடினர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் ஜொலிக்கவில்லை. எனவே பேட்டிங்கில் நிலவும் தடுமாற்றத்தை தவிர்க்க வேண்டிய நிலையில் இரு அணிகளும் இருக்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்தை வீழ்த்துவதற்குரிய திட்டம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். யார் அதிவேகமாக பவுன்சர் பந்து வீசுகிறார்கள் என்பதில் எங்கள் கவனம் இல்லை. டெஸ்ட் போட்டியை வெல்வதற்காகவே நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம். எத்தனை காயங்கள் ஏற்படுத்தபோகிறோம் என்பதை பார்க்க நாங்கள் வரவில்லை. பவுன்சர் பந்து வீச்சு எல்லா பவுலர்களின் பந்து வீச்சிலும் ஒரு அங்கமாகும். அத்தகைய பந்து வீச்சு பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்த உதவுமானால் அதனை நாங்களும் பயன்படுத்துவோம்’ என்றார்.
Tags:    

Similar News