செய்திகள்
பாடி பில்டர் பாஸ்கரன்

தமிழக வீரர் பாஸ்கரன் உள்பட 19 பேருக்கு அர்ஜூனா விருது - மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

Published On 2019-08-21 05:14 GMT   |   Update On 2019-08-21 05:14 GMT
அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மன் உள்பட 19 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டர் வீரர் எஸ்.பாஸ்கரனும் அடங்குவார்.
புதுடெல்லி:

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை தேர்வு கமிட்டி ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இந்த நிலையில் மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வமாக விருது பெறுவோரின் பட்டியலை வெளியிட்டது. இதன்படி விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதை ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் பெறுகிறார்கள்.

அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர், பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத், தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மன் உள்பட 19 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டர் (உடற்கட்டு) வீரர் எஸ்.பாஸ்கரனும் அடங்குவார். சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன், ஐ.சி.எப்.-ல். பணியாற்றி வருகிறார்.

அர்ஜூனா விருது பெறுவது குறித்து பாஸ்கரன் கூறுகையில், ‘நான் உலக மற்றும் ஆசிய அளவிலான பாடி பில்டிங் போட்டிகளில் பட்டம் வென்று இருக்கிறேன். மத்திய அரசு, பாடி பில்டிங்கை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது 20 ஆண்டு கால கஷ்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த விருது இளைஞர்களுக்கு இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்கம் அளிப்பதாக இருக்கும்’ என்றார்.

இது தவிர சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான்சந்த் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார். கேல்ரத்னா விருதுக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளுக்கு தலா ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

Tags:    

Similar News