செய்திகள்
அரை சதமடித்த திமுத் கருணரத்னே

நியூசிலாந்துக்கு எதிரான காலே டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இலங்கை

Published On 2019-08-17 14:02 GMT   |   Update On 2019-08-17 14:02 GMT
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 135 ரன்களே தேவைப்படுவதால் இலங்கை அணியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
காலே:

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ராஸ் டெய்லரின் (86) சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 149 ரன்கள் சேர்த்தது.

அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை குசால் மெண்டிஸ் (53), மேத்யூஸ் (50), டிக்வெல்லா (61) ஆகியோரின் அரைசதங்களால் 267 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.
 
18 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜீத் ராவல் (4), கேன் வில்லியம்சன் (4), ராஸ் டெய்லர் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

டாம் லாதம் 45 ரன்களும்,ஹென்ரி நிக்கோல்ஸ் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் வாட்லிங் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். அவர் 77 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாமர்வில்லி 40 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் , நியூசிலாந்து அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி சார்பில் லசித் எம்பல்டெனியா 4 விக்கெட்டும், தனஞ்செயா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் திமுத் கருணரத்னேவும், லஹிரு திரிமன்னேவும் இறங்கினர். இருவரும் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நான்காம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 71 ரன்னுடனும், திரிமன்னே 57 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நாளை போட்டியின் கடைசி நாள் என்பதால், வெற்றிக்கு தேவையான 135 ரன்களை எடுத்து எளிதில் வெற்றி பெறும் ஆர்வத்தில் இலங்கை அணியினர் உள்ளனர்.
Tags:    

Similar News