செய்திகள்
ராஸ் டெய்லர்

காலே டெஸ்ட்: ராஸ் டெய்லர் பொறுப்பான ஆட்டம்- நியூசிலாந்து முதல் நாளில் 203-5

Published On 2019-08-14 12:19 GMT   |   Update On 2019-08-14 12:19 GMT
இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் ராஸ் டெய்லர் நிலைத்து நின்று 86 ரன்கள் அடிக்க நியூசிலாந்து முதல் நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்துள்ளது.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணியின் ஜீத் ராவல், டாம் லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்றாலும் இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா இந்த ஜோடியை பிரித்தார். நியூசிலாந்து அணி 64 ரன்கள் எடுத்திருந்த போது டாம் லாதம் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சனை ரன்ஏதும் எடுக்காமல், ராவலை 33 ரன்னிலும் அடுத்தடுத்து தனஞ்ஜெயா வெளியேற்றினார்.

இதனால் 71 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லருடன் ஹென்ரி நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

ராஸ் டெய்லர் அரைசதம் அடித்த நிலையில், நிக்கோல்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ் டெய்லர் செஞ்சூரியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.



நியூசிலாந்து அணி 68 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

ராஸ் டெய்லர் 86 ரன்களுடனும், மிட்செல் சான்ட்னெர் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஐந்து விக்கெட்டுக்களையும் தனஞ்ஜெயாவே வீழ்த்தினார்.
Tags:    

Similar News