செய்திகள்
முகமது ஷாசாத்

முகமது ஷாசாத் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Published On 2019-08-10 15:25 GMT   |   Update On 2019-08-10 15:25 GMT
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான முகமது ஷாசாத் உடனான ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திடீரென ரத்து செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி தொடக்க வீரருமானவர் முகமது ஷாசாத். இவர் ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக் ஆட்டங்களிலும் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 16 பந்துகளில் 74 ரன்கள் குவித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஷாசாத் பங்கேற்றார். உலகக்கோப்பை தொடரில் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய ஷாசாத் காயம் காரணமாக தொடரில் இருந்து விலக்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

ஆனால், தான் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் கிரிக்கெட் வாரியம் தனக்கு எதிராக செயல்படுவதாக ஷாசாத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முகமது ஷாசாத் வெளி நாடுகளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பங்கேற்பதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறவில்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிகளை அவர் பலமுறை மீறியுள்ளார். 

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் போதும் அவர் ஒழுங்கு நடவடிக்கையை மீறி செயல்பட்டார். இது குறித்த விசாரணையில் பங்கேற்க ஷாசாதுக்கு கடந்த மாதம் 20 மற்றும் 25 தேதிகளில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

ஆகையால், முகமது ஷாசாதுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News