செய்திகள்
விராட் கோலி

ரி‌ஷப் பந்த் திறமையான வீரர் - விராட் கோலி பாராட்டு

Published On 2019-08-07 06:49 GMT   |   Update On 2019-08-07 06:49 GMT
ரி‌ஷப் பந்த் திறமையான வீரர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.

கயானா:

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

கயானாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது.

போல்லார்ட் அதிக பட்சமாக 45 பந்தில் 58 ரன்னும் (1 பவுண்டரி, 6 சிக்சர்), போவெல் 20 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர் 4 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். நவ்தீப் சைனி 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் எடுத்தனர். 147 ரன் இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரி‌ஷப் பந்த் 42 பந்தில் 65 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் வீராட்கோலி 45 பந்தில் 59 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். ஒசானே தாமஸ் 2 விக்கெட்டும், ஆலன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்திய அணி பெற்ற ஹாட்ரிக் வெற்றியாகும். ஏற்கனவே முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட்இண்டீசை ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் விராட்கோலி விக்கெட் கீப்பரும், அதிரடி வீரருமான ரி‌ஷப் பந்த்தை பாராட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரி‌ஷப் பந்தின் எதிர் காலத்தை நிச்சயமாக நாங்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறோம். அவரிடம் ஏராளமான திறமைகள் இருக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க கூடிய திறன் பெற்றவர்.

அவர் தொடர்ந்து ஆடுவதன் மூலம் இந்திய அணி மேம்பாடு அடையும். நெருக்கடியை முற்றிலும் மாறுபட்டு கையாள்வது தான் தேவையானது.

தீபக் சாஹர் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. புவனேஸ்வர்குமார் போன்று அவரது பந்துவீச்சு திறமையாக இருக்கிறது. புதிய பந்தில் நேர்த்தியாக வீசுகிறார். அவர் பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவாக இருந்தார்.

இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி நடக்கிறது. முதல் ஒருநாள் ஆட்டம் நாளை (8-ந்தேதி) நடைபெறுகிறது.

Tags:    

Similar News