செய்திகள்
சதமடித்த மகிழ்ச்சியில் ஸ்மித்

ஸ்டீவன் சுமித் சதம் - இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சரிவிலிருந்து மீண்டது ஆஸ்திரேலியா

Published On 2019-08-02 04:35 GMT   |   Update On 2019-08-02 04:35 GMT
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது.
பர்மிங்காம்:

இங்கிலாந்துக்கு சென்றுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராப்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தொடுத்த தாக்குதலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர்.

வார்னர் 2 ரன்னிலும், பான்கிராப்ட் 8 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் ஆஸ்திரேலியா 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.

அடுத்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் தாக்குப்பிடித்து ஆடினார்.

தொடர்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட் 35 ரன், மேத்யூ வேட் 1 ரன், கேப்டன் டிம் பெய்ன் 5 ரன், ஜேம்ஸ் பேட்டின்சன் (0), கம்மின்ஸ் (5 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 122 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.



அடுத்து இறங்கிய பீட்டர் சிடில் ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. சிடில் 44 ரன்னில் வெளியேறினார். கடைசியாக பொறுப்புடன் ஆடி சதமடித்த ஸ்மித் 144 ரன்களில் போல்டு ஆனார்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 80.4 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்துள்ளது.
Tags:    

Similar News