செய்திகள்
டிஎன்பிஎல்

டிஎன்பிஎல் 2019 - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது வெற்றி பெறுமா? காரைக்குடி காளையுடன் நாளை மோதல்

Published On 2019-07-25 07:20 GMT   |   Update On 2019-07-25 07:20 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நாளைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் காரைக்குடி காளை அணியும் மோதுகின்றனர்.
நெல்லை:

4-வது டி.என்.பி.எல். 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன்னில் தோற்றது.

2-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்சுக்கு எதிராக 41 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நாளை (26-ந் தேதி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி காரைக்குடி காளையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ஹரிஷ் குமார், கோபிநாத், கங்கா ஸ்ரீதர் ராஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீரர் அலெக்சாண்டர் முத்திரை பதிக்கும் வகையில் உள்ளார். அவர் திருச்சி வாரியர்சுக்கு எதிராக 9 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார்.

இதே போல முருகன் அஸ்வின், பெரியசாமி போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

காரைக்குடி காளை அணியும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் திருச்சி வாரியர்சை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் காஞ்சி வீரன்சிடம் 110 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 8-வது ‘லீக்’ ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. கோவை அணி 2-வது வெற்றி ஆர்வத்திலும், டூட்டி பேட்ரியாட்ஸ் முதல் வெற்றி வேட்கையிலும் உள்ளன.

7 ஆட்டங்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், காஞ்சி வீரன்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 5 அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. திருச்சி வாரியர்ஸ், டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் இதுவரை புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
Tags:    

Similar News