செய்திகள்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அலெக்சாண்டர்

டிஎன்பிஎல் கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அலெக்சாண்டர் சாதனை

Published On 2019-07-24 05:59 GMT   |   Update On 2019-07-24 05:59 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் அலெக்சாண்டர் சாதனை படைத்துள்ளார்.
நெல்லை:

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி வாரியர்சை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது.

ஹரிஷ்குமார் 23 பந்தில் 39 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கோபிநாத் 25 பந்தில் 37 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கங்கா ஸ்ரீதர் ராஜூ 26 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சரவணகுமார் 2 விக்கெட்டும், விக்னேஷ், பொய்யாமொழி, சாய் கிஷோர், விக்னேஷ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

149 ரன் இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் களம் இறங்கியது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி திணறியது. குறிப்பாக சுழற்பந்து வீரர் அலெக்சாண்டரின் நேர்த்தியான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்தது.

திருச்சி வாரியர்ஸ் அணியில் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 41 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆதித்யா பரூத் அதிகபட்சமாக 29 ரன் எடுத்தார். அலெக்சாண்டர் 5 விக்கெட்டும், பெரிய சாமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

அலெக்சாண்டர் 4 ஓவர் வீசி 9 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் டி.என்.பி.எல். வரலாற்றில் அவர் புதிய சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடிய சாய் கிஷோர் காரைக்குடி காளை அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் 13 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை அலெக்சாண்டர் முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகனிடம் 10 ரன்னில் தோற்று இருந்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 26-ந்தேதி நெல்லையில் இரவு 7.15 மணிக்கு நடக்கிறது.

திருச்சி வாரியர்ஸ் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளையிடம் தோற்றது. 3-வது ஆட்டத்தில் கோவை கிங்சை 27-ந்தேதி எதிர்கொள்கிறது.

டி.என்.பி.எல். போட்டியின் 7-வது ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் காஞ்சி வீரன்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

காரைக்குடி காளை 2-வது வெற்றி ஆர்வத்திலும், காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றி ஆர்வத்திலும் உள்ளது.
Tags:    

Similar News