செய்திகள்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் இன்று மோதல்

Published On 2019-07-23 07:11 GMT   |   Update On 2019-07-23 07:21 GMT
டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நெல்லையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நெல்லை:

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

இந்தப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

நேற்றுடன 5 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, தான் மோதிய 2 ஆட்டத்திலும் வென்று 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

கோவை கிங்ஸ், நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 3 அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் இன்னும் புள்ளிகள் பெறவில்லை.

டி.என்.பி.எல். போட்டியின் 6-வது ‘லீக்’ ஆட்டம் நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது.

இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சாய்குமார் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 10 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் தோற்று இருந்தது. இதனால் திருச்சி வாரியர்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கில் முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. எனவே பேட்டிங்கில் கூடுதல் கவனத்துடன் விளையாடுவது அவசியமாகும்.

திருச்சி வாரியர்ஸ் அணியும் தொடக்க ஆட்டத்தில் காரைக்குடி காளையிடம் தோற்றது. சூப்பர் ஓவரில் அந்த அணி வாய்ப்பை இழந்தது.

இரு அணிகளும் முதல் வெற்றியை பெற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

Similar News