செய்திகள்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றி ஆர்வம் - திருச்சி வாரியர்சுடன் நாளை மோதல்

Published On 2019-07-22 06:15 GMT   |   Update On 2019-07-22 06:15 GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி வாரியர்சுடன் மோதுகிறது.
நெல்லை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

கடந்த 19-ந்தேதி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 10 ரன்னில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.

2-வது போட்டியில் காரைக்குடி காளை சூப்பர் ஓவரில் திருச்சி வாரியர்சையும், 3-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான டூட்டி பேட்ரியாட்சையும் வீழ்த்தின.

நேற்று நடந்த 4-வது போட்டியில் கோவை கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்சை தோற்கடித்தது.

5-வது ‘லீக்’ ஆட்டம் இன்று நடக்கிறது. நெல்லை ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியில் சிலம்பரசன், கவுசிக், முகமது போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். மதுரை அணியில் கேப்டன் அருண் கார்த்திக், கிரண் ஆகாஷ், மிதுன் சரத்ராஜ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 6-வது ‘லீக்’ ஆட்டம் நாளை (23-ந்தேதி) நடக்கிறது. நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல்லிடம் தோல்வியை தழுவி இருந்தது. இதனால் திருச்சி வாரியர்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

ஆனால் பேட்டிங் மோசமாக இருந்ததால் தோல்வி ஏற்பட்டது. இதைசரி செய்யும் வகையில் நாளைய ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும்.

இதேபோல திருச்சி வாரியர்ஸ் அணியும் தொடக்க ஆட்டத்தில் தோற்று இருந்தது. இதனால் அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
Tags:    

Similar News