செய்திகள்
திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டி.என்.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்

Published On 2019-07-18 05:11 GMT   |   Update On 2019-07-18 05:11 GMT
4-வது டி.என்.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் திண்டுக்கல் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுக டி.என்.பி.எல். போட்டியில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 2017-ம் ஆண்டு நடந்த 2-வது டி.என்.பி.எல். போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

கடந்த முறை மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (19-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 15-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் சீசெம் மதுரை பாந்தர்ஸ், முன்னாள் சாம்பியன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், வி.பி. காஞ்சி வீரன்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆகஸ்ட் 9-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகிறது. ‘பிளேஆப்’ சுற்று 11-ந்தேதி தொடங்குகிறது.

மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் 15 ஆட்டங்களும், நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் 15 ஆட்டங்களும் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இறுதிப்போட்டி (ஆகஸ்ட் 15) உள்பட 2 ஆட்டம் நடக்கிறது.

ஒரு ஆட்டம் நடைபெறும் நாட்களில் போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கும். இரண்டு ஆட்டம் நடைபெறும் நாட்களில் முதல் ஆட்டம் மாலை 3.15 மணிக்கும், 2-வது போட்டி இரவு 7.15 மணிக்கும் தொடங்கும்.

4-வது டி.என்.பி.எல். போட்டிக்காக 8 அணிகளுக்கும் 45 வீரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

ஏற்கனவே 17 வீரர்களை தன் வசப்படுத்தி இருந்த சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணி ஐ.பெரியசாமி, டி.ராகுல், தாவித்குமார், ஜெபசெல்வின், சந்தானசேகர் ஆகிய 5 பேரை வாங்கியது.

4-வது டி.என்.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன. இதனால் முதல் ஆட்டமே பரபரப்பு நிறைந்து இருக்கும்.

கவுசிக் காந்தியின் வரவு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் வழங்கப்படும்.
Tags:    

Similar News