செய்திகள்
பென் ஸ்டோக்ஸ்

‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்

Published On 2019-07-17 12:55 GMT   |   Update On 2019-07-17 12:55 GMT
‘ஓவர் த்ரோ’ மூலம் நான்கு ரன்கள் வழங்கப்பட்டதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியை யாராலும் மறக்க முடியாது. ‘ஓவர் த்ரோ’ மூலம் ஆறு ரன்கள், இரண்டு முறை போட்டி ‘டை’ ஆன பின்பு அதிக பவுண்டரிகள் அடித்த அணிக்கு மகுடம் என இதுவரை நடக்காத சம்பவங்கள் நடைபெற்றன.

இதில் மிகவும் விமர்சனம் செய்யப்பட்ட சம்பவம் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்துக்கு 6 ரன்கள் கொடுத்ததுதான். இங்கிலாந்து அணிக்கு கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. டிரென்ட் போல்ட் வீசிய 4-வது பந்தை பென் ஸ்டோக்ஸ் சந்தித்தார்.

பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் அடித்துவிட்டு வேகமாக இரண்டு ரன்கள் எடுக்க ஓடினார். 2-வது ரன்னுக்கு ஓடும்போது அவர் க்ரீஸை நெருங்குவதற்குள் மார்ட்டின் கப்தில் பீல்டிங் செய்து வீசிய பந்து கீப்பரை நோக்கி பாய்ந்து வந்தது. ரன்அவுட்டில் இருந்து தப்பிக்க பென் ஸ்டோக்ஸ் பாய்ந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து பேட்டில் பட்டு கீப்பருக்கு பின்புறமாக பவுண்டரிக்குச் சென்றது.

இதனால் ஓடி எடுத்தது இரண்டு ரன், ‘ஒவர் த்ரோ’ மூலம் நான்கு ரன் என 6 ரன்கள் கொடுக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பு மங்கிப்போனது. பென் ஸ்டோக்ஸ் கைகள் இரண்டையும் உயர்த்தி தன் மீது தவறு ஏதும் இல்லை என்பதை சைகை மூலம் காண்பித்தார்.

போட்டிக்குப்பின் நியூசிலாந்து கேப்டனிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் அவர் நடுவர்களிடம் நான்கு ரன்கள் எங்களுக்கு வேண்டாம். அதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் நினைவு கூர்ந்துள்ளார்.



இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் விதிமுறைப்படி பந்தை ஸ்டம்ப் நோக்கி வீசும்போது, பந்து பேட்ஸ்மேன் மீது பட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் சென்று அப்படியே கிடந்தால், அதற்கு ரன்கள் கோர முடியாது. அதேவேளையில் பந்து பவுண்டரிக்கு சென்றால், விதிமுறைப்படி அது பவுண்டரி. இந்த விஷயத்தில் நான் ஒன்னும் செய்ய இயலாது.

ஆட்டத்திற்குப் பிறகு பென் ஸ்டோக்ஸ் மைக்கேல் வாகனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பென் ஸ்டோக்ஸ் வாகனிடம், நான் நடுவர்களிடம் சென்று, ஓவர் த்ரோ மூலம் எங்களுக்குக் கொடுத்த நான்கு ரன்களை எடுத்துக் கொள்ள முடியுமா? அந்த ரன்களை நாங்கள் விரும்பவில்லை என்று கூறியதாக நான் அறிகிறேன். ஆனால் அது விதிமுறை என்பதால், கொடுக்கப்பட்டு விட்டது என்றார்.
Tags:    

Similar News