செய்திகள்
ரவி சாஸ்திரி சஞ்சய் பாங்கர் பரத் அருண்

விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம்: ரவி சாஸ்திரியும் விண்ணப்பிக்க வேண்டும்

Published On 2019-07-15 14:22 GMT   |   Update On 2019-07-15 14:22 GMT
ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். அவருக்குத் துணையாக பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணும், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரும், பீல்டிங் பயிற்சியாளராக  ஆர் ஸ்ரீதரும் உள்ளனர்.

நேற்றுடன் முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு இவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை இந்தியா வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. இதனால் இந்தத் தொடரை வரை அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி வென்றிருந்தால் ரவி சாஸ்தரி மற்றும் அவரின் உதவியாளர்களின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்படிருக்கும். அப்படி நீட்டிக்கப்பட்டால் விமர்சனம் ஏதும் கிளம்பாது.

ஆனால் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததால் அணி நிர்வாகம் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பயிற்சியாளர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ரவி சாஸ்திரியும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன் துணைப் பயிற்சியாளர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். வரவேற்கப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

டிரைனர் ஷங்கர் பாசு, பிசியோ பாட்டிரிக் பர்கட் ஆகியோருக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ரவி சாஸ்திரி கடந்த 2017-ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார். இவரின் பதவிக்காலத்தில்தான் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முதலாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News