செய்திகள்
ஹாமில்டன்

பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம் - ஹாமில்டன் முதலிடம்

Published On 2019-07-15 05:32 GMT   |   Update On 2019-07-15 05:32 GMT
பார்முலா1 கார்பந்தயத்தில் 10 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 223 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
சில்வர்ஸ்டோன்:

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.198 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 08.452 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து 26 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவர் பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அவரை விட 24.9 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்தை சேர்ந்த வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். 4 முறை சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

10 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 223 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போட்டாஸ் 184 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி வருகிற 28-ந்தேதி ஜெர்மனியில் நடக்கிறது.
Tags:    

Similar News